
இடைப்பாடி அருகே குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து குடித்து கணவர், கர்ப்பிணி மனைவி, மகன் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மேல்கொட்டாயூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35). கரும்பு வெட்டும் தொழிலாளி. மனைவி சாந்தி (25). இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. அருண் (4), நந்தகுமார் (5) என்ற மகன்கள் இருந்தனர். இன்று காலை வெகுநேரமாகியும் செந்திலின் வீடு திறக்கப்படவில்லை. யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். பதில் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு செந்தில், சாந்தி, அருண் மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். சிறுவன் நந்தகுமாரை காணவில்லை. தகவல் கிடைத்து வந்த உறவினர்கள், இதுகுறித்து இடைப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் காலி குளிர்பான பாட்டில், தென்னை மரத்தில் பூச்சிகளை அழிக்க வைக்கப்படும் விஷ மாத்திரை பாக்கெட், ஸ்வீட் பாக்கெட் கிடந்தன. போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கடந்த 20 நாட்களுக்கு முன்பு வைகுந்தம் அருகே பெரிய தாண்டவனூரில் உள்ள தாய் வீட்டுக்கு மகன்களுடன் சாந்தி சென்றிருந்தார். கோயில் திருவிழா நடப்பதால், ஒரு வாரத்துக்கு முன்பு செந்திலும் அங்கு சென்றார். திருவிழா முடிந்து, நேற்று காலை எல்லாரும் இடைப்பாடி வந்தனர். சிறிது நேரத்தில் சாந்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மனைவியை இடைப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு செந்தில் அழைத்துச் சென்றார். குழந்தைகளும் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பும்போது, இடைப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர், தியேட்டரில் பகல் காட்சி பார்த்துவிட்டு ஸ்வீட் பாக்கெட், அரை லிட்டர் குளிர்பானம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
3 பேர் சடலம் மட்டுமே வீட்டுக்குள் கிடந்தது. மூத்த மகன் நந்தகுமாரை காணவில்லை. அவன் எங்கு போனான், என்ன ஆனான், அவனுக்கும் விஷம் கொடுத்தார்களா என்ற தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. சாந்தி, பல ஆண்டாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பாதிக்கும் பணம் மருந்து, மாத்திரைக்கே சரியாகப் போகிறது என அடிக்கடி புலம்பி வந்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சாந்தி தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:
Post a Comment