
போலி அமெரிக்க டாலர்கள் கொடுத்து தொழில் அதிபரிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த நைஜீரிய ஆசாமி, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். திருச்சியை சேர்ந்தவர் ஜெயகலால் பட்டேல், மரவியாபாரி. சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்குஜுடு (37) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், ஜெயகலாலை சந்தித்தனர். ‘‘நாங்கள் வெளிநாட்டில் உயர்ரக மரங்கள் விற்கிறோம். மிக குறைந்த விலையில் மரப்பலகைகள் கிடைக்கும்’’ என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஜெயகலால், மரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதற்காக ரூ.50 லட்சம் கொடுத்தார். மேலும், சுக்குஜுடு, தன்னிடம் அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுன்ளார். அதையும் நம்பி, ரூ.50 லட்சம் கொடுத்து, அமெரிக்க டாலர்கள் வாங்கியுள்ளார் ஜெயகலால். மரம் குறித்து ஜெயகலால் பட்டேல், சுக்குஜுடுவிடம் தொலைபேசியில் கேட்டபோது, ஓரிரு நாளில் மரம் வந்துவிடும் என்று காலம் தாழ்த்தி உள்ளார்.
இதற்கிடையில், சுக்குஜுடு கொடுத்த அமெரிக்க டாலர்களை மாற்ற முயன்ற போது அவை போலி என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஜெயகலால், திருச்சி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுக்குஜுடுவை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு மும்பையில் இருந்து வரும் கிங்பிஷர் விமானத்தில் சுக்குஜுடு வருவதாக திருச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிங்பிஷர் விமானத்தில் வந்த சுக்குஜுடுவை விமான நிலைய போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை வந்து காலை 11 மணிக்கு கொழும்பு, அங்கிருந்து மலேசியா சென்று அங்கிருந்து நைஜீரியா செல்ல சுக்குஜுடு திட்டம் போட்டிருந்தது தெரிய வந்தது. திருச்சி போலீசார் விரைந்து வந்து சுக்குஜுடுவை நேற்று மாலை கைது செய்து அழைத்து சென்றனர்.

0 comments:
Post a Comment