Tuesday, December 22, 2009

போலி இன்சூரன்ஸ் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு



இதுவரை சிபிஐ விசாரித்த போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை, இனி சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 21 வழக்குகளில் நாங்கள் புலன் விசாரணை நடத்தி, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டோம்.
தற்போது, மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன. இதை விசாரிக்க சிபிஐயில் போதிய ஆட்கள் இல்லை. எனவே, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்த இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சிபிஐ தரப்பில் வக்கீல் சந்திரசேகர், இன்சூரன்ஸ் தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசு சார்பில் வக்கீல் குமரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க போதிய ஆட்கள் இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறியதை இன்சூரன்ஸ் தரப்பு மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியவுடன், ரூ.81 கோடி இன்சூரன்ஸ் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று இன்சூரன்ஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம்.
எனவே, எதிர்காலத்தில் வரும் போலி இன்சூரன்ஸ் மோசடி புகார்களை, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். இதுவரை 21 வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.
இதற்காக, சிபிசிஐடி போலீஸ் கூடுதல் டிஜிபி தனிப்படையை அமைக்க வேண்டும். அதன்பிறகு, போலி இன்சூரன்ஸ் மோசடி புகார் மீது விசாரித்து, சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment