Tuesday, December 29, 2009

பிச்சைக்காரரிடம் திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்



வண்டலூரை சேர்ந்தவர் குமார்(43). ரயில்வே டிரைவர். செங்கல்பட்டு & கடற்கரை ரயிலை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஓட்டிச் சென்றார். கார்டு ராமதாஸ் உடன் சென்றுள்ளார். செங்கல்பட்டில் இருந்து 10.15 மணிக்கு திரும்ப வேண்டும். 45 நிமிடம் இருந்ததால் இருவரும் ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சீனிவாசன் (27) அங்கு வந்தார். ஓய்வு நேரம் என்பதால் லுங்கி அணிந்திருந்தார்.
பிளாட்பாரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரரின் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார் சீனிவாசன்.
இதைப்பார்த்த குமாரும், ராமதாசும் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், போலீஸ்காரனான என்னையே திட்டுகிறீர்களா? என்று டிரைவர் குமாரை உயிர்நிலையில் எட்டி உதைத்து முகத்தில் குத்தியுள்ளார். அதே இடத்தில் குமார் மயங்கி விழுந்தார். ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காயாம்பு வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போலீஸ்காரர் சீனிவாசனை தேடி வருகிறார். இந்நிலையில், சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே போலீஸ் எஸ்பி உத்தரவிட்டார்.
ரயில்வே டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சீனிவாசனை உடனே கைது செய்யக்கோரி, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Saturday, December 26, 2009

ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்



மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.
ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா? டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.
அப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tuesday, December 22, 2009

போலி இன்சூரன்ஸ் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு



இதுவரை சிபிஐ விசாரித்த போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை, இனி சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 21 வழக்குகளில் நாங்கள் புலன் விசாரணை நடத்தி, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டோம்.
தற்போது, மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன. இதை விசாரிக்க சிபிஐயில் போதிய ஆட்கள் இல்லை. எனவே, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்த இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சிபிஐ தரப்பில் வக்கீல் சந்திரசேகர், இன்சூரன்ஸ் தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசு சார்பில் வக்கீல் குமரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க போதிய ஆட்கள் இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறியதை இன்சூரன்ஸ் தரப்பு மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியவுடன், ரூ.81 கோடி இன்சூரன்ஸ் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று இன்சூரன்ஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம்.
எனவே, எதிர்காலத்தில் வரும் போலி இன்சூரன்ஸ் மோசடி புகார்களை, சென்னையில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். இதுவரை 21 வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.
இதற்காக, சிபிசிஐடி போலீஸ் கூடுதல் டிஜிபி தனிப்படையை அமைக்க வேண்டும். அதன்பிறகு, போலி இன்சூரன்ஸ் மோசடி புகார் மீது விசாரித்து, சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, December 7, 2009

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா???




பாலிவுட் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் இன்றைய ஹாட் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்திதான்.

முன்னணி பத்திரிகைகள், இணையதளங்களில் வெளியாகியுள்ள இந்த செய்திகளை பச்சன் குடும்பம் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.

அதே நேரம் முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறாராம் ஐஸ்வர்யா ராய். பா படத்தின் சிறப்புக் காட்சியின் போது, அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க, அமிதாப்பும் அவர் மகன் அபிஷேக்கும்தான் வந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டனர்.

கர்ப்பத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் ஐஸ்வர்யா ராயை ஓடியாடி வேலை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுரைத்திருப்பதாலேயே இப்படி என்று செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி நிருபர்கள் கேட்டதற்குக்கூட, எந்த பதிலும் கூறாமல் சிரித்து மழுப்பினராம் மாமனார் அமிதாப்பும், ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக்கும்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தன் குடும்பத்தினருடன் போய் குழந்தை வரம் வேண்டி சிறப்புப் பூஜைகள் செய்தது நினைவிருக்கலாம்.

சந்தோஷச் செய்திதானே, எதற்கு இந்த மறைப்பு..?